தேனி: கம்பம் அருகே சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை மற்றும் சுருளி அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில், தற்போது வரை நீர் வரத்து குறையாததால், மூன்றாவது நாளாக இன்றும் சுருளி அருவியில் குளிக்க தடையை நீட்டித்துள்ளனர். தொடர்ந்து, அருவி பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் நீர் வரத்து குறையாததாதால் 10-வது நாளாக தடையை நீட்டித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.