தேனி: கும்பக்கரை அருவியில் குளிக்க 18 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 18 நாட்களாக ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு தற்போது குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு அதிக அளவில் நீர்வரத்து ஏற்பட்டது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள், கடந்த 18 நாட்களாக அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்திருந்தனர். இந்நிலையில், தற்போது மழை குறைந்து, அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளதால், வனத்துறையினர் நிலைமையை மதிப்பீடு செய்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, கும்பக்கரை அருவிக்கு இன்று அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கும்பக்கரை அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.