Surprise Me!

3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை

2026-01-09 2 Dailymotion

வேலூர்: அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 90 வீரர்கள் மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறையின் கோரிக்கையின்பேரில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) நான்காவது பிரிவிலிருந்து 90 வீரர்கள், மூன்று மாவட்டங்களுக்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.  

அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடலூர், திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மீட்பு குழுக்கள் மீட்பு உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள், தொலைத்தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு பொருட்களுடன் வாகனங்கள் மூலம் சாலை மார்க்கமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.