தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் புகழ் பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டு வரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.
பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை விற்பனை நடைபெறும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டி உள்ளது. வழக்கமாக சனிக்கிழமை தொடங்கும் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நேற்றிரவே தொடங்கி விட்டது.
சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடு ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1200 வரை விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட கிலோவிற்கு ரூ.300 வரை உயர்ந்துள்ளது. 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ. 12000 முதல் ரூ. 15000 வரை விற்பனையானது. ஆடுகள் விலைகள் உயர்ந்திருந்தாலும் ஆட்டுக்கிடாய் விற்பனை அதிகமாக காணப்பட்டது.
இதே போல், ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.