தேனி: கர்னல் ஜான் பென்னிகுயிக்-யின் 185 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்-யின் 185ஆவது பிறந்தநாள் விழா ஜனவரி 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பென்னிகுயிக்கின் பிறந்தநாள் விழா அவரது மணிமண்டபம் அமைந்துள்ள தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பொங்கல் வைத்து, பென்னிகுயிக்கின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, பென்னிகுயிக் புகழைப் போற்றும் விதமாக கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களை தொடர்ந்து தேனி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்டச் செயலாளர்கள் ஜக்கையன் மற்றும் முறுக்கோடை ராமர் ஆகியோர் தலைமையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்து, கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் அதிமுகவினரும் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்தைப் பரிமாறிக் கொண்டனர்.