தஞ்சாவூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு 24 மணி நேரம் பக்தி நடனமாடி உலக சாதனை புரியும் நிகழ்வு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அபிநயாஸ் கலை குழுமம் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பகோணம் மாநகரில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நடனம் பயிற்றுவித்து வருகிறார்கள்.
இதுவரை கிருஷ்ணன், பெருமாள், கிராமிய நாட்டுப்புற பாடல்களில் தொடர்ந்து நடனமாடி 4 உலக சாதனைகள் இந்த அமைப்பினர் புரிந்துள்ளனர். இந்நிலையில், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இவர்கள் இன்று 5வது உலக சாதனை படைக்கும் பொருட்டு, 24 மணி நேரம் பக்தி நடனமாடும் நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில், இலங்கை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து நடன பயிற்சி பெறும் 3 வயது முதல் 58 வயது வரையிலான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டுள்ளனர் அனைவருமே சிவபெருமான் வேடம் புனைந்து தொடர்ந்து 24 மணி நேரம் நடனமாடி சாதனை புரிய திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலை 6 மணி முதல் நடன நிகழ்ச்சி தொடர்ந்து இடைவேளையின்றி தனிநபர், குழு நடனம் என நடைபெற்று வருகிறது. நாளை காலை 6 மணி வரை நடைபெறும் இத்தொடர் நடன நிகழ்வில் மொத்தம் 480 பேர் பங்கேற்று நடனம் புரிகின்றனர். இந்த சாதனை நிகழ்வு ராயல் புக் ஆப் வேல்டு ரிக்காட்ஸ் இன்டர்நேஷனலில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.